இன்று வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து வருகின்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். கேட்கும் பேசும் அனுபவங்களுடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைக்கு எழுதும், வாசிக்கும் திறன்கனை வளர்ச்சியடையச் செய்வது பாடசாலையில் நடைபெற வேண்டிய செயலாகும். அறிவைப் பெற்றுக் கொள்ளும் முக்கிய வழி வாசிப்பாதலால் ஆரம்பப் பருவத்திலிருந்தே அதற்குத் தேவையான திறன்களை வளர்த்தல் வேண்டும்.
வாசிப்பின் முக்கியத்துவம்
முன்னைய பரம்பரை தமது அறிவுக் களஞ்சியத்தை அடுத்த பரம்பரைக்கு வழங்கியது போலவே தற்போதைய பரம்பரையும் தமது அறிவுக் களஞ்சியத்தை எதிர்கால பரம்பரைக்கு வழங்க வேண்டும்.
அறிவைப் பெற்றுக் கொண்டவர் கள் அதை அடிப்படையாக வைத்து மேலும் முன்னேற முடியும். அறிவுக் களஞ்சியங் களான நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிக்கும் ஆர்வத்தை சிறு பராயத்திலிருந்தே ஏற்படுத்த வேண்டும்.
வாசித்தல் குறைபாடு உள்ள மாணவர் கற்றலில் பின்தங்கி இருப்பதைக் காணலாம். மாணவர்களின் வாசிப்புத் திறன்களை வளர்க்கப் பொருத்தமான சூழ்நிலையை, வகுப்பறையில் உண்டாக்குவது ஆசிரியரின் பாரிய பணியாகும். நீண்ட காலங்கள் நிலைபெறக் கூடிய வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்குவது மிக அவசியம். மாணவரின் முதிர்ச்சி விருப்பங்களுக்கேற்ற வகையில் வாசித்தல் செயற்பாடொன்றை அமைத்தல் வேண்டும்.
வாசிப்பதில் தாக்கங்களை ஏற்படுத்தும் காரணிகள்
1. உடற் காரணிகள்
2. உளக் காரணிகள்
3. மன எழுச்சிக் காரணிகள்
4. சுற்றாடற் காரணிகள்
உடற் காரணிகள்
உச்சரித்தல், கேட்டல், பார்த்தல், தொடர்பான உறுப்புகளைக் கருதலாம். இவ்வுறுப்புகளான வாய், காது, கண் ஆகியன நன்றாகச் செயற்பட்டால் வாசிப்பைக் கற்பித்தல் இலகு. இவைகளில் ஒன்றிலே தானும் குறைபாடுகள் காணப்பட்டால் வாசிப்புக் கற்பிக்கும் போது பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் வாசிப்பை நன்கு அவதானிப்பதால் இக்குறைபாடுகளைக் கண்டு கொள்ளலாம்.
உளக் காரணிகள்
உளக் காரணியாகக் கூறக்கூடியது நுண்மதியாகும். சொற் களஞ்சியம் நுண்மதியில் தங்கியுள்ளது.
நுண்மதி குறைந்த பிள்ளை வாசிப்பிலும் பின்தங்கியிருப்பதை அறிய முடிகிறது.
மனவெழுச்சிக் காரணிகள்
வீட்டுச் சூழல் பொருத்தமற்ற நிலையில் இருப்பது. ஆசிரியரினதும், பாடசாலையினதும் கடும் சட்டதிட்டங்களும் பிள்ளையிடம் மனவெழுச்சிக் கோளாறுகளை உண்டாக்கலாம்.
சுற்றாடற் காரணிகள்
பிள்ளையின் வீடு வாசிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் அமைவதில்லை. பிள்ளைகளிடத்தில் வாசிக்கும் ஆரம்ப ஆயத்தங்களில் வேறுபட்ட தன்மைகள் காணப்படுகின்றன. வகுப்பறையில் சிறந்த சூழலை அமைப்பதால் குறைபாடுகள் நிரம்பிய சூழலில் வசிக்கும் பிள்ளைக்கும் வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்கலாம் படங்கள் வாசிப்புத் தாள்கள், மாதிரி உருவங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் விளையாட்டுச் செயல்களால் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கலாம்.
வாசிப்பதில் பல்வேறு வகைகள்
உரத்து வாசித்தல், மெளனமாக வாசித்தல் என இரு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஆரம்ப வகுப்புகளில் வினாக்களைக் கொடுத்து அவற்றுக்கு விடைகளைக் காண்பதற்காக வாசிக்க விடலாம். ஏதாவது விடயத்தை நன்றாகத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவும் வாசிப்புப் பயிற்சியை வழங்கலாம்.
வாசிப்பு வேகம் அதிகரிப்பது முக்கிய அம்சமாகும். வாசிக்கும் போது வரிகளுக்கு நேரேயும் இடையேயும் பார்வையைக் கொண்டு போகும் வேகத்தை அதிகரிக்கச் செய்தல் வேண்டும்.
ஆசிரியரால் கொடுக்கப்படும் ஒரு கால எல்லைக்குள் மாணவர் வாசித்திருக்கும் அளவைப் பரிசோதிக்கலாம். மின் அட்டைகளைக் காட்டி உடன் மறைத்து அவைகளிலுள்ள கட்டளைகளுக்கேற்பச் செயல்படும் செயல்களைக் கொண்டு பிள்ளைகளின் வாசிக்கும் வேகத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
வாசிப்பைக் கற்பிக்கும் முறைகள்
1. எழுத்து அரிச்சுவடி முறை (வழக்கில் இல்லை)
2. ஒலி முறை
3. சொல் முறை
4. வாக்கிய முறை
5. வாசிப்பு முன் பயிற்சி
6. சொல் வட்டம்
7. விதி முறையிலான வாசித்தல்
8. சொற் சக்கரம்
9. வசனங்களையும் பந்திகளையும் வாசித்தல்.
வாசிக்கும் போது
1. திருத்தமாக உச்சரித்தல்
2. தொனி வேறுபாட்டுடன் வாசித்தல்
3. நிறுத்தக் குறிகளைக் கவனித்து வாசித்தல்
4. கிரகித்தலுடன் வாசித்தல்
5. உணர்ச்சி, வெளிப்பாட்டுடன் வாசித்தல்
6. சந்தர்ப்பத்திற்கேற்ப அபிநயம் செய்தல்
7. வாசிக்கும் போது பொருத்தமான நிலை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
வாசிப்புக் குறைபாடுகளும் அவற்றிற்கான பரிகாரங்களும்
வாசிப்பில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய பொதுவான காரணிகள்
1. மாணவர்களின் கண்ணும், காதும் நன்றாகப் பயிற்றப்படாமல் இருப்பது.
2. வாசிப்பின் முன் ஆயதத்திற்கான அப்பியாசங்கள் போதாமல் இருப்பது
3. வகுப்பில் மாணவர் தொகை அதிகமாகவிருப்பதால் குறைபாடுள்ள பிள்ளைகளில் ஆசிரியர் கவனத்தைச் செலுத்த முடியாதிருப்பது.
4. பிள்ளைஅடிக்கடி பாடசாலைக்கு வரத் தவறுவது.
5. ஆசிரியர் முறையான வேலைத்திட்டமொன்றைப் பின்பற்றாதிருப்பது.
6. ஆசிரியரின் வாசிப்பில் குறைபாடுகள் இருப்பது.
பிள்ளைகளிடம் காணப்படும் வாசிப்புக் குறைபாடுகளும், தீர்வுகளும்
1. வரிகளை விட்டு வாசித்தல்
வரிசையின் இடமிருந்து வலமும், அடுத்த வரிசைக்குச் செல்லும் போது வலமிருந்து இடமும் பார்வையைச் செலுத்தும் பழக்கக் குறைபாட்டினால் வரிகளை விட்டு வாசிக்க நேரிடும். வாசிக்கும் வரியை மாத்திரம் நோக்கும் விதத்தில் கடதாசி அட்டைகளால் மறைத்து, வரிக்கு வரி அந்த அட்டையை நகர்த்தி நகர்த்தி வாசிக்கச் செய்தல் வேண்டும்.
சொற்களை விட்டு வாசித்தல்
கிரகித்தலின்றி வாசிப்பதால் ஏற்படுகிறது. சொற்களை இனங்காணும் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும்.
சொற்களின் எழுத்து விட்டு வாசித்தல்
கவனக் குறைவாக வாசிப்பதால் ஏற்படுகிறது. பிள்ளை தவறு விடும் சொல்லை அச்சமயம் கரும்பலகையில் அல்லது கடதாசி ஒன்றில் எழுதி விசேடமாக அதை வாசிக்கச் செய்யலாம்.
ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் வாசித்தல்
ஒரே சொல்லை அல்லது அதற்கு அடுத்த சொல்லை அறியாமல் இருப்பதாலும்,
பதற்றத்தாலும் இக்குறைபாடு உண்டாகலாம்.
படத்தைப் பார்த்து பாடத்தை வாசித்தல்
பாடத்தில் வரும் சொற்களை அறியாமல் படத்தைப் பார்த்து வாசித்தல்
முதல் எழுத்தைக் கண்டவுடன் சொல்லைப் பிழையாக வாசித்தல்.
முழுமையாக சொல்லில் பார்வையைச் செலுத்தாது கவனக் குறைவாக வாசித்தல்.
ந, த, க போன்ற எழுத்துக்களை மாறி வாசித்தல்
எழுத்துக்களிடையேயுள்ள வித்தியாசங்களை நன்றாக அறியாததால் ஏற்படுகிறது.
வாசித்தல் குறைபாடுகளை நீக்கி வாசிப்பு ஆர்வத்தை பிள்ளைகளில் வளர்க்கப் பாடுபடுவோம்.
மூலம் : சலசலப்பு.காம்
No comments:
Post a Comment