SJK T ARUMUGAM PILLAI PROGRAM TRANSFORMASI SEKOLAH TS25 - ASPIRE TO EXCEL வெற்றிக்கு வேட்கை

Saturday 25 April 2020

டாக்டர் மு.வரதராசனார்

தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் அறிஞர்
*டாக்டர் மு.வரதராசனார்!*
பிறந்த நாள் கட்டுரை.
(கரிகாலன்)
ஏப்ரல் 25 1912 - அக்டோபர் 10 1974

தமிழ் இலக்கியம், கல்வி மற்றும் மொழியியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய முன்னோடி அறிஞர் டாக்டர் மு. வரதராசன் ஆவார் . அவர் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள வேலம் என்ற சிற்றூரில் முனுசாமி முதலியார்-அம்மாக்கண்ணு ஆகியோரின் மகனாகத் தோன்றினார். அவரது  இயற்பெயர் திருவேங்கடம். துவக்கக் கல்வியை வேலத்தில் நிறைவு செய்த வரதராசன், உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் பயின்றார். படிப்பை முடித்த பின் சிலகாலம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். உடல்நலக் குறைவு ஏற்படவே அப்பணியிலிருந்து விலகினார். ஓய்வுக்காகத் தன் கிராமத்துக்குச் சென்றவர், கல்வி ஆர்வத்தால் முருகைய முதலியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். 1935ல் வித்வான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காகத் திருப்பனந்தாள் மடம் வழங்கிய பரிசுத் தொகை ரூபாய் ஆயிரத்தைப் பெற்றார். தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அந்தக் காலத்தில்தான் தனது மாமன் மகள் ராதாவுடன் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருநாவுக்கரசு, நம்பி, பாரி என மூன்று மகவுகள் அவருக்கு வாய்த்தனர். 1939வரை திருப்பத்தூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். முனைந்து பயின்று பி.ஓ.எல். பட்டம் பெற்றார். ஓய்வு நேரத்தில் கதை, கவிதைகள் எழுதத் தொடங்கினார். குழந்தைகளுக்காக பாடல் மற்றும் கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராகத் திகழ்ந்த அவரது முதல் நூலான 'குழந்தைப் பாட்டுக்கள்' 1939ல் வெளியானது.

மு.வ.வின் திறமையை நன்கு உணர்ந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார், அவரைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு அழைத்தார். அவ்வழைப்பினை ஏற்றுக் கொண்ட மு.வ., விரிவுரையாளராக மாணவர்களின் உளம் கவரும்படித் திறம்படப் பணியாற்றினார். எளிமையும் அன்பும் கொண்டிருந்த அவர், தம் மாணவர்களிடையேயும் இவ்வகை எண்ணங்கள் வளரக் காரணமாக அமைந்தார். மு.வ.வின் அறிவுத்திறனும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கும் மாணவர்களை ஈர்த்தன. அவரால் அறிவும் செறிவும் கொண்ட ஓர் இளந்தலைமுறை உதயமானது. 1944ல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். அப்போதுதான் முதன் முதலாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்ட ஆய்வு துவங்கப் பெற்றது. மு.வ., "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழத்தின் முதல் டாக்டர் பட்டதாரி ஆனார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்த அவர், மாணவர்கள் பலரை இலக்கியம் மற்றும் படைப்பின்பால் ஈர்த்தார். தனது முதல் நாவலான 'செந்தாமரை' யை யாரும் வெளியிட முன் வராததால் தாமே அதனை வெளியிட்டார். தொடர்ந்து வெளியான 'கள்ளோ, காவியமோ?' அவருக்கு இலக்கிய அந்தஸ்தை அளித்தது. பேராசிரியராக மட்டுமல்லாமல் ஓர் இலக்கியவாதியாகவும் அவர் ஏற்றுக் கொள்ளப்பட அந்நாவலே முதற் காரணமாக அமைந்தது. அதற்குத் தமிழக அரசின் சிறப்பு விருதும் கிடைத்தது.

மொழியியல் ஆய்வுகளிலும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்த மு.வ., தொடர்ந்து படைப்புலகில் தனது தீவிர கவனத்தைச் செலுத்தினார். சங்க இலக்கியத்தின் தாக்கத்தால் விளைந்த 'பாவை', இலக்கியம் கூறும் களவு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்டது. இது தவிர அவர் எழுதிய குறிப்பிடத்தக்க புதினங்களாக 'கயமை', 'டாக்டர் அல்லி', 'அந்தநாள்', 'நெஞ்சில் ஒரு முள்', 'மண்குடிசை', 'வாடாமலர்' போன்றவற்றைக் குறிப்பிடலாம். சமூக அவலங்களைப் பிரதிபலிக்கும் அவரது சிறுகதைகளான 'எதையோ பேசினார்', 'தேங்காய்த் துண்டுகள்', 'விடுதலையா?', 'குறட்டை ஒலி' போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பிடத்தக்க நாடகங்களையும் அவர் எழுதியிருக்கிறார். மு.வ. எழுதிய, 'பெண்மை வாழ்க', 'அறமும் அரசியலும்', 'குருவிப் போர்', 'அரசியல் அலைகள்' போன்ற கட்டுரைகள் சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அவரது 'அரசியல் அலைகள்', 'மொழியியற் கட்டுரை' நூல்களுக்குத் தமிழக அரசின் சிறப்புப் பரிசு கிடைத்தது. 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'மொழிநூல்', 'விடுதலையா?', 'ஓவச் செய்தி' போன்ற நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. 'அகல்விளக்கு' நாவல் "சாகித்ய அகாதமி" விருது பெற்றது. ஓர் ஓவியனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 'கரித்துண்டு', வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றது. இவரது 'பெற்றமனம்' நாவல் திரைப்படமானது.

மு.வ.வின் எழுத்துக்கள் ஆர்ப்பாட்டமில்லாதவை. அமைதியான ஆற்றொழுக்கான நடையில் புதைந்திருப்பவை. காந்தியக் கருத்துக்களை வலியுறுத்துபவை. அஹிம்சையைப் போதிப்பவை. அன்பை அடிப்படையாகக் கொண்டவை. அதே சமயம் தாம் சொல்ல வந்த கருத்தை மனதிற் தைக்கும்படிச் சொல்லுபவை. அவருடைய கதை கூறும் பாணி, தன்மை ஒருமையில், கதை நாயகனே கதை கூறும் பாணியில் அமைந்திருக்கும். கதைகளில் ஆங்காங்கே தனது கருத்துகளை - அறிவுரைகள் போல்; பொன்மொழிகள் போல் - வலியுறுத்திக் கூறியிருப்பார். வாழ்க்கையின் பிணக்குகளைத் தீர்க்கும் வல்லமை அறிவை விட அன்பிற்கே உண்டு என்பதைத் தனது பல படைப்புகளில் மு.வ. வலியுறுத்தியுள்ளார். மு.வ.வின் எழுத்துக்கள், படிப்பவர்களை மேலும் சிந்திக்கத் தூண்டுபவை  என்பதைவிட படிப்போரின் உள்ளத்தை மென்மேலும் பண்படுத்துபவை என்று கூறுவது மிகையல்ல. அதே சமயம் மாணவர்களுக்குப் போதிக்கும் பேராசிரியர் பணியின் தாக்கம் அவரது எழுத்தில் தென்பட்டன என்றாலும் அக்காலத்துச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மு.வ. மதிக்கப்பட்டார். "மு.வ. பைத்தியம் பிடித்துத் தமிழக வாசகர்கள் அலைந்த காலத்தை நான் நேரில் பார்த்தவன். அந்த மனநிலை மக்களுக்கு வந்ததன் காரணமே மு.வ.வின் படைப்புகளின் நேர்த்திதான்" என்று மறைந்த திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் தனது 'இணையற்ற சாதனையாளர்கள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளராக மு.வ. ஆற்றியிருக்கும் பணிகளை விடக் கல்வியாளராக அவர் ஆற்றியிருப்பவை மிக அதிகம். அவர் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்ட பெருமைக்குரியது. அந்நூலுக்கு சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. 'தமிழ் நெஞ்சம்', 'மணல் வீடு', 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'முல்லைத் திணை', 'நெடுந்தொகை விருந்து', 'குறுந்தொகை விருந்து', 'நற்றிணை விருந்து', 'இலக்கிய ஆராய்ச்சி', 'நற்றிணைச் செல்வம்', 'குறுந்தொகைச் செல்வம்', 'கண்ணகி', 'மாதவி', 'இலக்கியத் திறன்', 'இலக்கிய மரபு', 'கொங்குதேர் வாழ்க்கை', 'இலக்கியக் காட்சிகள்', 'மொழி நூல்', 'மொழி வரலாறு', 'மொழியின் கதை', 'எழுத்தின் கதை' போன்ற நூல்கள் பல ஆய்வுகளுக்கு அடிப்படையாய் அமைந்தன. சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப் பெற்ற மு.வ.வின் திருக்குறள் தெளிவுரை, நூற்றுக்கு மேற்பட்ட பதிப்புக் கண்ட அரும் நூலாகும். 'அன்னைக்கு...', 'தம்பிக்கு...', 'தங்கைக்கு...', 'நண்பர்க்கு...' போன்றத் தலைப்புகளில் அவர் எழுதியவை, கடித இலக்கியத்தில் புகழ் பெற்றவை. உள்ளத்தைப் பண்படுத்தும் அறிவுரைகளைக் கொண்டவை. அது தவிர காந்தியடிகள், ரவிந்திரநாத் தாகூர், திரு.வி.க., பெர்னாட்ஷா போன்றோரது வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார். சங்க இலக்கியம் பற்றியும், இளங்கோ அடிகள் பற்றியும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு ஆசானாக விளங்கிய திரு.வி.க., மு.வ.வை தனது  மகன் போலவே கருதினார். தனது இறுதிச் சடங்குகளை மு.வ.வும், அ.ச.ஞாவுமே நடத்த வேண்டுமென அவர் ஆணையிட, அதன்படியே அக்கடமையை டாக்டர் மு.வ.  நிறைவேற்றினார்.

தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், தமிழ் ஆட்சிமொழிக் குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், சாகித்ய அகாதமி, பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்துத் தமிழ்ப் பணியாற்றியுள்ளார். பல பல்கலைக்கழகங்களின் செனட் உறுப்பினராகவும், பாடத் திட்டக் குழுத் தலைவராகவும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர். நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரைகள் என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். இவரது பல நூல்கள் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ரஷ்யன், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரப் பேராட்ட நூற்றாண்டு விழாவின் போது தமிழக அரசு, டாக்டர் மு.வ.விற்கு பாராட்டுப் பத்திரம், நடராஜர் உருவம் பொறித்த செப்புக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது.

1961ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான மு.வ., 1971 வரை சுமார் 10 ஆண்டுகளாக அப்பணியில் தொடர்ந்தார். அதன்பின் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் பெற்றார். அப்பணியை அவர்  செவ்வனே ஆற்றினார். சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், ரஷ்யா, மலேசியா, இலங்கை, பாரிஸ், எகிப்து என உலகமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
1972ல் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி அவரது தமிழ்ப் பணிக்காக டி.லிட். பட்டம் வழங்கிக் கௌரவித்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.தான். உலகம் சுற்றி வந்த முதல் தமிழ்ப் பேராசிரியரும் அவரே! பணியில் இருக்கும் போதே அக்டோபர், 10, 1974 இல், தமது 62 ஆம் வயதில் டாக்டர் மு.வ. காலமானார். அவர் மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பின் அவரது எழுத்துப் படிவங்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வளர்ச்சியிலும், வரலாற்றிலும் டாக்டர் மு.வரதராசனாருக்கு தனிச் சிறப்புண்டு என்பதில் ஐயமில்லை. எதிர்காலம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களை, பேராசிரியர்களை, துணை வேந்தர்களைப் பெறலாம். ஆனால் மலர் போன்ற இரக்க சிந்தையும், மலை போன்ற கொள்கைத் திடமும் கொண்ட ஒரு பண்பாளரை, அறிவுத் தந்தையை, அன்புமிக்க  ஆசானை, இறுதி வரையில் கொள்கைப் பிடிப்போடும் அற நெறியோடும், வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை  எதிர்காலத்தில் இனி காண்பது அரிது.


   *நிறைவு!*

No comments:

Post a Comment

Sambutan Hari Bumi Peringkat Sekolah 2024