வைகாசி விசாக திருநாளில் புத்தபெருமானின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி பலவித சமய நிகழ்வுகள் இடம்பெறும். இந்துக்கள் ”வைகாசி விசாகம்” என கொண்டாடும் இப்புனிதநாளைப் பௌத்தர்கள் ”விசாக பண்டிகை” எனக் கொண்டாடுகின்றனர்.
இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களைக் கொண்ட நாளாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
1. சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் லும்பினி (நேபாள்) என்னுமிடத்தில் அவதரித்த நாளாகவும்,
2. புத்தகயா எனும் இடத்தில் அவர் தவம் புரிந்து புத்த நிலை (ஞானம்) அடைந்த நாளாகவும்.
3. புத்தரபிரான் பரிநிர்மாணம் அடைந்த நாளாகவும் இன்நாள் அமைந்து நிற்கின்றது.
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாக பெளத்தர்கள் நம்புகின்றனர். இக்காலப் பகுதியில் தண்ணீர்ப் பந்தல்கள், அன்னதான உணவு வழங்கும் பந்தல்கள், தோரணங்கள், வெளிச்சக் கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
நேபாளத்தின் லும்பினி என்ற இடத்தில் கி. மு. 560 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுத்தோதன மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் சித்தார்த்தர். இளமைக் காலத்தின் சுகபோகங்களை அனுபவிக்கும் தனது 29 ஆவது வயதில் வாழ்க்கையில் மூன்று முக்கிய தத்துவங்களான மூப்பு, பிணி, மரணம் ஆகியவற்றை நேரில் கண்டார்.
இச்சம்பவத்தின் பின் இம்மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து நிலையான மெய்ஞ்ஞானத்தைத் தேடி முற்றும் துறந்த துறவியாக மாறி “கெளதம புத்தர்” என்ற பெயரைப் பெற்றார் இளவரசராகிய சித்தார்த்தர்.
தான் மரணிக்கும் வரைக்கும் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்து பொருளுக்கும் போகத்திற்கும் போராடும் மாந்தர்களுக்கு வாழ்வின் உண்மையான அர்த்தங்களைப் போதித்து வந்தவர் புத்த பிரான்.
வாழ்வில் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு முதன்மைக் காரணம் மெய்ப்பொருள் பற்றிய அறிவின்மை. நிரந்தரமாற்ற சிற்றின்பங்களின் மீதான பற்றே அறியாமை உருவாக வழிசமைக்கின்றது. அகிம்சையைப் பின்பற்றும் தியான வழிமுறை ஊடாக மன அமைதியையும் தெளிவையும் பெறுவதன் மூலம் அறியாமை இருள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடியும் என்பதை கெளதம புத்தரின் போதனைகள் வலியுறுத்துகின்றன.
மெய்ஞ்ஞானத்தை அடைந்த மனிதனின் வாழ்வில் அறியாமை இருள் நீங்கி நிலையான மகிழ்ச்சியும் அமைதியும் குடியிருக்கும் என்ற பெளத்த மதத்தின் தத்துவத்தை வெசாக் வெளிச்சக் கூடுகள் எடுத்துக் கூறுகின்றன.
அன்பு ஒன்றை மட்டுமே போதித்து வந்த போதி மாதவனின், பிறப்பு, பரி நிர்வாணமடைதல், இறப்பு ஆகிய முப்பரிமாணங்களை நினைவுகூரும் தினமே வெசாக் பண்டிகை. இந்தியாவின் பல மாநிலங்களிலும் ‘விசாகப் பண்டிகை’ யாக இது கொண்டாடப்படுகிறது.
அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட புத்த பெருமான்.
இனம், நிலம், மொழி ஆகியவற்றை கடந்த மக்கள் நலம்பெற வேண்டும் என்ற தரும நெறியினைக் கொண்டது பெளத்த சமயம். அது மக்களின் வாழ்க்கை நெறியாக இருந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும், இலக்கிய சான்றுகளும் பல உண்டு.
பிற சமயங்களின் கோட்பாடுகளை ஒப்பு நோக்க,பெளத்த நெறியின் சிறப்பையும் நம்மால் உணர முடியும். யான் எனது என்னும் செருக்கை அறுத்து, ஆரா இயற்கை ஆவாவை நீக்கி, பேதமை அகற்றி, தீயவை அஞ்சி, எண்ணத்தில் தூய்மை கொண்டு,வினைத் தூய்மையையும் மேற்கொண்டு, மூத்த அறிவுடையார் தொடர்பில் இணைந்து வாழ ஒருவனை ஊக்குவிப்பதே புத்தரின் கொள்கையாக விளங்கியது.
துக்கத்திற்கும், துன்பத்திற்கும் அடிப்படை காரணமே நமது ஆசைகள்தான் என்பதை வலிறுத்தினார். இன்பத்தைத் தேடி மனிதன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த போதிலும், முடிவில் அவன் அடையும் பயன் துன்பந்தான்; சாவுதான்.
ஆற்றல் மிக்க அறிவு நெறியாக, உலக உயிர்க் குலத்தின் துயர் துடைத்து, துன்பம் போக்கிதூய நெடியாக, மனித இன அமைதியைக் கட்டிக் காத்த அருள் நெறியாக பெளத்தம் விளங்கியது. – தி மலேசியன் டைம்ஸ் –
நன்று
ReplyDelete