SJK T ARUMUGAM PILLAI PROGRAM TRANSFORMASI SEKOLAH TS25 - ASPIRE TO EXCEL வெற்றிக்கு வேட்கை

Thursday, 2 April 2020

வைரமுத்துவின் கவிதை - மரம்


மரங்களைப் பாடுவேன்.
மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சிரியகுறி,
நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்,
விண்மீனுக்குத் தூண்டில் போடும் கிளைகள்,
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்,
உயிர் ஒழுகும் மலர்கள்,
மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு!
மனிதன் தோன்றும் முன் மரம் தோன்றிற்று!
மரம் நமக்கு அண்ணன், அண்ணனைப் பழிக்காதீர்கள்!
மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய கூடாரம்,
மரம் அப்படியா?
வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம் கொண்டது அதுவேதான்!
மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் முற்றுப் புள்ளி.
மரம் இருக்கும் வரை பூ பூக்கும் இறக்கும் வரை காய் காய்க்கும்.
வெட்டி நட்டால் கிளை மரமாகுமே,
வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா?
மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம் வயது சொல்லும்.
மனிதனை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்.மரத்திற்கும் வழுக்கை விழும் மறுபடி முளைக்கும்.
நமக்கோ உயிர் பிரிந்தாலும் மயிர் உதிர்ந்தாலும்.
ஒன்றென்று அறிக!மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய் சலவை செய்வது?
மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது?
மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏறி?
பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும் உத்திரவாதம் மனிதர் நாம் தருவோமா?
மனிதனின் முதல் நண்பன் மரம்!
மரத்தின் முதல் எதிரி மனிதன்!
ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!
உண்ண கனி,
ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,
உணர்வுக்கு விருந்து,
அடைய குடில்,
அடைக்க கதவு,
அழகு வேலி,
ஆட தூலி,
தடவ தைலம்,
தாளிக்க எண்ணை,
எழுத காகிதம்,
எரிக்க விறகு,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!
பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்,
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்,
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்,
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்,
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின் உபயம்,
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்,
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்,
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!

எழுதியவர்: கவிஞர் வைரமுத்து


No comments:

Post a Comment

Sambutan Hari Bumi Peringkat Sekolah 2024