SJK T ARUMUGAM PILLAI PROGRAM TRANSFORMASI SEKOLAH TS25 - ASPIRE TO EXCEL வெற்றிக்கு வேட்கை

Monday, 30 March 2020

கொரோனாவும் தேசத்தின் எல்லைகளும்

இன்றோடு பதிநான்காவது நாள். எவ்வித வித்தியாசமும் இல்லாத அதே இரவு. குழலியிடமிருந்து காலையிலிருந்து அழைப்பு இல்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நாளிலிருந்து ஒரு நாளில் பலமுறை பேசிவிடும் அவளுடைய அழைப்பில்லாத ஓர் ஒற்றையிரவு துன்பகரமானதாக நீண்டு கொண்டிருந்தது.

சிங்கை எல்லையைக் காண்கிறேன். வெறிச்சோடி தெரிகிறது. எப்பொழுதும் பரப்பரப்பிற்குப் பேர்போன சிங்கை மலேசிய எல்லையில் நிலவும் அதீத மௌனமும் விட்டுவிட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகளும் மனத்தை என்னவோ செய்து கொண்டிருந்தன.

வழங்கப்பட்டிருக்கும் நான்காவது மாடியிலுள்ள ஒரு சிற்றறையில் உட்கார்ந்திருக்கிறேன். இனி மலேசியாவிற்குள் நுழைய எத்தனை நாள்கள் ஆகும் என்றும் தெரியவில்லை. இரு நாட்டைப் பிரிக்கும் சிறிய எல்லை; தாண்டினால் ஜொகூர்பாருவில் வீடு. வீட்டில் குழலி தனது அழகான சிரிப்புடன் அப்பா வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் காத்திருந்து உறைந்து பழகியிருப்பாள்.

இரவு அனைத்துவிதமான கூச்சல்களையும் நெருக்கடிகளையும் தாண்டி மலேசியா சென்று சேரும்போது எனக்காக் காத்திருந்து வரவேற்பறையிலேயே வாயில் எச்சில் வடிய தூங்கிவிட்டிருக்கும் குழலியைத் தூக்கும்போது மனத்தில் உடலில் தேங்கிக் கிடக்கும் அத்தனை கணங்களும் சட்டென இலகுவாகி எங்கோ பறந்து கொண்டிருக்கும். அவளைத் தொட்டுத் தூக்காத கைகளில் வெறும் வெறுமை மட்டுமே படர்ந்திருந்தது.

“ப்பா! எப்பப்பா வருவீங்க? அம்மா சொல்றாங்க நீங்க வர மாசக் கணக்கா ஆகுமாம். ஏன்பா வர மாட்டுறீங்க?”

“ப்பா! எனக்குப் புதுசா வந்திருக்கும் பொம்மை, லெகோ, சட்டைலாம் வாங்கி தரேன்னு சொன்னீங்க. எப்பப்பா போலாம்?”

அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் என்னிடம் இல்லை என்பதை எப்படி அவளிடம் சொல்லி விளக்குவேன். எல்லையைத் தாண்டி இருபது கிலோ மீட்டர் மட்டுமே இருக்கும் அவளுக்கும் எனக்குமான இந்தத் தூரத்தை எப்படிக் கடப்பது?

“ம்மா! செல்லக்குட்டி. குழலிம்மா... இங்க சிங்கப்பூர், மலேசியா எல்லா நாட்டுலயும் இப்போ ஒரு கிருமி பரவிக்கிட்டு இருக்குமா. அப்பாவ இங்கேந்து அனுப்ப மாட்டாங்க. அப்பா அங்க வந்தனா உங்களுக்கெல்லாம் ஆபத்துமா... புரியுதாடா?”

நேற்று பேசி முடித்த வார்த்தைக்கு அவளிடமிருந்து எதிர்பார்த்த பதில் வருவதற்குள் மஞ்சுவின் அழைப்பேசி துண்டித்துக் கொண்டது. அநேகமாக அவளுடைய மாதக் கட்டணத்தை இணையத்தின் வழியாகச் செலுத்துவதாகச் சொல்லியிருந்தாள்; மறந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்று முழுவதும் அழைப்பும் வரவில்லை. நானும் பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை.

கொஞ்சம் பதற்றம். மாமாவிடம் சொல்லி முயற்சித்துப் பார்த்தும் அவரும் அதையே சொன்னார். குழலிக்கு என்ன ஆயிற்று? மஞ்சு ஒருநாள் முழுவதும் அழைக்காமல் இருக்க மாட்டாள். எல்லையை விட்டுப் பாய்ந்தோடி குழலியையும் மஞ்சுவையும் பார்க்க மனம் துடித்தது. வீட்டிற்கு அருகே இருக்கும் நண்பர் கணேஷ்க்கு முயற்சித்தேன். அவரும் எனது அழைப்பை எடுக்கவே இல்லை.

இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குவாந்தானில் இருக்கும் மஞ்சுவின் அப்பா தொடர்பு கொண்டார். மஞ்சுவின் அழைப்பேசிக்கு எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை என்றே பதிலளித்தார். மனத்தைக் கிருமியைவிட ஆபத்தான வெறுமையும் பதற்றமும் கௌவிக்கொண்டன.

சட்டென்று, கணேஷ் அழைத்தார். உயிர் மீண்டும் புத்துயிர் பெற்று வந்ததைப் போல இருந்தது. நடந்ததையெல்லாம் பதற்றத்துடன் கூறிமுடித்தேன். முகக்கவசத்தை அணிந்துகொண்டு கணேஷ் வீட்டிற்குச் சென்று மீண்டும் அழைப்பதாகக் கூறினார்.

“ஒன்றும் ஆகிடாது குழலிம்மா. உனக்கும் அம்மாவிற்கும் ஒன்றும் ஆகிவிடாது. உங்கள பிரிஞ்சி வேற நாட்டின் எல்லைக்குள்ள தவிச்சிக்கிட்டு இருக்கேன்மா...”

கணேஷிடமிருந்து அழைப்பு வருகிறது. அவர் சொல்லப் போகும் தகவல் என்னவாக இருக்கும்? மனம் பதறுகிறது. கைகள் நடுங்க அழைப்பை எடுத்தேன்.

“ப்பா! நான் குழலி பேசறன்பா... எப்படி இருக்கீங்க? அம்மாவோட போன் வேலை செய்யலப்பா... எப்பப்பா வருவீங்க?”

உடைந்து அழுதேன்.

-ஆக்கம்: கே.பாலமுருகன்


(இன்னமும் தன் குடும்பத்துடன் சேராமல் நாட்டிற்கு வெளியில் காத்திருப்பவர்களுக்கு)

Sambutan Hari Bumi Peringkat Sekolah 2024